லக்கிம்பூர் கேரியில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியையைச் சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை!
Tragedy in Lakhimpur Kheri Female Teacher Shot Dead Inside School Premises by Ex-Partner Who Kills Himself
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள 'சில்ட்ரன்ஸ் அகாடமி' பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளேயே, ஆசிரியை ஒருவரை அவரது முன்னாள் காதலன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லக்கிம்பூர் கேரியில் செயல்பட்டு வரும் சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில் 26 வயதான நிஷாத் பாத்திமா என்ற பெண் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரும், முகமது சவுத் (27) என்ற இளைஞரும் கடந்த சில காலமாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நிஷாத் பாத்திமா சமீபத்தில் இந்த உறவை முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகமது சவுத், நேற்று முன்தினம் காலை சுமார் 11:30 மணியளவில் பையில் ரகசியமாகத் துப்பாக்கியை மறைத்து எடுத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
தொடர்ந்து, ஆசிரியை நிஷாத் பாத்திமாவை மேல் தளத்தில் உள்ள நடைபாதைக்கு அழைத்துச் சென்ற சவுத், அங்கு அவரிடம் கடுமையாகத் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நிஷாத் பாத்திமாவை நோக்கிய சுட்டுள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு வகுப்பறையில் இருந்த மாணவர்களும் சக ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். பாத்திமா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைக் கண்ட சவுத், உடனடியாக அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த லக்கிம்பூர் கேரி காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சவுத் ஆசிரியையின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. பட்டப்பகலில் மாணவர்கள் கண்முன்னே பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடந்த இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Tragedy in Lakhimpur Kheri Female Teacher Shot Dead Inside School Premises by Ex-Partner Who Kills Himself