அழியும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ்? காங்கிரஸுடன் இணைகிறதா மம்தா கட்சி? பரவும் யூகங்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்!
TMC Facing Existential Crisis Congress Denies Merger Rumors Amid Mass Rebel Defections in West Bengal
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் சந்தித்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான உட்கட்சிப் பூசலையும் பிளவுகளையும் சந்தித்து வருகிறது. இந்தத் தொடர் அரசியல் பின்னடைவுகள் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன.
எம்.எல்.ஏ-க்கள் பிளவு மற்றும் எம்.பி-க்கள் கிளர்ச்சி
தேர்தலில் வெற்றி பெற்ற 80 டிஎம்சி எம்.எல்.ஏ-க்களில், ஏற்கனவே 52 பேர் தனி அணியாகப் பிரிந்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். இந்த அதிருப்தி குழுவின் தலைவராகவும் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவராகவும் ரிதாப்ரதா பானர்ஜி செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, அக்கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களும் (MPs) கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த அதிருப்தி எம்பிக்கள் பட்டியலில் பிரபலங்களான சத்ருகன் சின்ஹா மற்றும் யூசுப் பதான் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் - டிஎம்சி இணைப்பு வதந்தியும் மறுப்பும்
கட்சி முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அதைத் தடுக்கத் திரிணாமுல் காங்கிரஸை மீண்டும் தாய் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியை மதா பானர்ஜி நேரில் சந்தித்துப் பேசியது இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்தது.
ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்: இந்த இணைப்புச் செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "சோனியா காந்தி - மம்தா பானர்ஜி இடையேயான சந்திப்பு முற்றிலும் தனிப்பட்ட மற்றும் நட்பு ரீதியிலானது. இரு கட்சிகளையும் இணைக்கும் எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. இந்தச் செய்திகள் யாவும் அப்பட்டமான வதந்தி" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மறுபுறம், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் குழுவின் தலைவரான ரிதாப்ரதா பானர்ஜியும், தாங்கள் திரிணாமுல் காங்கிரஸிலேயேதான் தொடர்வதாகவும், காங்கிரஸில் இணையவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
வரலாற்றுப் பின்னணி
கடந்த 1998-ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து சித்தாந்த ரீதியாகப் பிரிந்து மம்தா பானர்ஜி தொடங்கியதே இந்தத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகும். தற்போது இந்தியா (INDIA) கூட்டணியை வலுப்படுத்துவதே தங்களின் ஒரே நோக்கம் எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை, அண்மையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மம்தா பங்கேற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், உட்கட்சி மோதல்களால் மம்தாவின் அரசியல் கோட்டை சரிந்து வருவது மேற்கு வங்க அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
TMC Facing Existential Crisis Congress Denies Merger Rumors Amid Mass Rebel Defections in West Bengal