நாளை ஜனவரி 14; சபரிமலை மகர ஜோதி திருவிழா: பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருஆபரணம்..!
The sacred ornaments have departed from Pandalam ahead of the Sabarimala Makaravilakku festival tomorrow
கேரளா சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி விழா நாளை (ஜனவரி 14) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான திரு ஆபரணங்கள் பந்தள அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
கடந்த 30-ஆம் தேதி சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டு தொடர் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மகரஜோதியன்று ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான திரு ஆபரணம், பந்தளம் அரண்மனை வலியகோயில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் வைப்பறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான மகரஜோதியை முன்னிட்டு நேற்று இந்த திருஆபரணத்துக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றதோடு, தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பல்வேறு கோயில்களைக் கடந்து பாரம்பரியப் பாதை வழியாக நாளை 14-ஆம் தேதி மாலை சரங்குத்திக்கு வந்ததும், அங்கு தேவசம்போர்டு அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படும்.

அதனை தொடர்ந்து, திருஆபரணம் ஊர்வலம் கடந்து சென்ற பிறகே நிலக்கல், பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். அத்தோடு, திரு ஆபரணப் பெட்டியை பக்தர்கள் தொடவோ, ஊர்வலம் செல்லும் பாதையில் குறுக்கிடவோ, கூட்டமாக நிற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகர ஜோதி தினமான நாளை மாலை 06.25 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெறும். அதன் பின்பு பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை சந்நிதானத்தில் இருந்தபடி பக்தர்கள் தரிசிப்பர். அதன்படி, சந்நிதானத்தில் இருந்தபடி மகர ஜோதியைக் காண 14 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வண்டிப் பெரியாறு, புல்மேடு, பஞ்சாலிமேடு, சத்திரம், பருந்தும்பாறை, அய்யன்மலை, பஞ்சுப்பாறை, இலவுங்கல், அட்டத்தோடு, நீலிமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரியும் ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மகர ஜோதியை பார்ப்பதற்காக மரத்தில் ஏறவோ, அனுமதிக்கப்பட்ட இடங்களைக் கடந்து காட்டுக்குள் செல்லவோ கூடாது என்று வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மகர ஜோதியை தரிசித்ததும் சந்நிதானத்தில் இருந்து பாண்டித்தாவளம் தரிசன வளாகத்தின் பின்புறம் இருந்து பம்பைக்கு திரும்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாளிகைப்புரம் இறங்குபாதை, கேஎஸ்இபி. சந்திப்பு வழியாகவும் பம்பைக்கு திரும்பலாம் என்றும், 19-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதோடு, வரும் 20-ஆம் தேதி பந்தள ராஜகுடும்ப பிரதிநிதியின் தரிசனத்துடன் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
The sacred ornaments have departed from Pandalam ahead of the Sabarimala Makaravilakku festival tomorrow