உமர் காலித்துக்கு ஆதரவாக கடிதம்: ஜோரான் மம்தானிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்..!
The Ministry of External Affairs has strongly condemned Zoran Mamdani who wrote a letter in support of Umar Khalid
டெல்லி கலவர வழக்கில் காலித் மற்றும் ஷர்ஜீல் உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும், 2019 ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) போராட்டங்களின் போர்வையில், 2020 பிப்ரவரியில் டெல்லியில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட சதி செய்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு ஆதரவாக கடிதம் எழுதிய நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது, 'தனிப்பட்ட விருப்பங்களை பொதுப்பதவியில் இருப்பவர்கள் வெளிப்படுத்துவது அழகல்ல' என குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சிறையில் உள்ளார். இந்த வார தொடக்கத்தில் இந்த கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமானை தவிர்த்து மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனிடையே உமர் காலித்துக்கு அமெரிக்க நகர மேயராக ஜனவரி 01 பதவியேற்ற இந்திய வம்சாவளியான மம்தானி எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்று டெல்லி கலவர வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு ஆதரவாக கைப்பட ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடித்தல் "கசப்புணர்வு குறித்து நீங்கள் கூறிய வார்த்தைகளையும், அது ஒருவரை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தையும் நான் அடிக்கடி நினைவு கூர்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கடிதத்தை உமர் காலித்தின் நண்பர், பனோஜ்யோத்ஸ்னா லஹிரி என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்படி, மம்தானிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (வெள்ளிக்கிழமை) கூறியதாவது:
"பொதுப் பிரதிநிதிகள் மற்ற ஜனநாயக நாடுகளின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்துவது பொதுப்பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, நியூயார்க் மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்." என பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
The Ministry of External Affairs has strongly condemned Zoran Mamdani who wrote a letter in support of Umar Khalid