ஜனநாயகன் இல்லேனா என்ன... பொங்கல் ரேஸில் ‘பராசக்தி’க்கு நேரடி போட்டியாக களமிறங்கும் ‘திரௌபதி 2’
What if there is no Janyayan Draupati 2 will compete directly with Parasakthi in the Pongal race
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீட்டு பட்டியலில் இருந்து விலகியுள்ள நிலையில், அந்த இடத்தை நிரப்பும் வகையில் பராசக்தி திரைப்படத்திற்கு நேரடி போட்டியாக மற்றொரு புதுப்படம் களமிறங்கியுள்ளது. அந்த படம் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான பான் இந்திய திரைப்படமான திரௌபதி 2 ஆகும்.
இளம் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள திரௌபதி 2 திரைப்படம், பதினான்காம் நூற்றாண்டை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சோழ சக்கரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜிப்ரான்.
மலையாள நடிகை ரக்ஷணா இந்து முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நட்டி நடராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல் ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பிலிப் ஆர். சுந்தர் மேற்கொண்டுள்ள நிலையில், எடிட்டராக தேவராஜ், கலை இயக்குநராக கமல்ஹாசன் பணியாற்றியுள்ளனர்.
ஹொய்சாள பேரரசர் வீர பல்லாள மூன்றாமனின் ஆட்சி, செந்தமங்கலம் காடவராயர்களின் பாரம்பரியம், ஏகாதிபத்திய மோதல்கள், உள்ளூர் எதிர்ப்பு மற்றும் கலாச்சாரப் புரட்சி போன்ற வரலாற்று கூறுகளை மையமாக வைத்து திரௌபதி 2 உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இது ஒரு சாதாரண வரலாற்றுப் படம் அல்ல; ஒரு சகாப்தத்தின் அரசியல், கலாச்சாரம் மற்றும் போராட்டங்களை உணர்வுபூர்வமாக சொல்லும் காட்சி அனுபவமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிப்ரான் இசையமைத்த “தாரசுகி ராம்…” என்ற பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜிப்ரான், கோல்ட் தேவராஜ் மற்றும் குரு ஹரிராஜ் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை இயக்குநர் மோகன் ஜியே எழுதியுள்ளார். நம்பிக்கை, சக்தி மற்றும் எதிர்ப்பை கதை சொல்லும் மொழியாக மாற்றும் விதத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதலில் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட திரௌபதி 2, தற்போது யாரும் எதிர்பாராத வகையில் பொங்கல் ரேஸில் களமிறங்குகிறது. ஜனநாயகன் திரைப்படம் விலகியதைத் தொடர்ந்து, திரௌபதி 2 ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரௌபதி முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வெளியீட்டில் பராசக்தி திரைப்படத்திற்கு திரௌபதி 2 கடும் போட்டியை ஏற்படுத்தும் என திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
English Summary
What if there is no Janyayan Draupati 2 will compete directly with Parasakthi in the Pongal race