'வாக்காளர் பட்டியலில் ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும்': தேர்தல் ஆணையகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
Supreme Court orders Election Commission to accept Aadhaar in voter list
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12-வது ஆவணமாக ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேரின் பெயர்களை அதிரடியாக நீக்கியது.
அதில் நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர் மற்றும் இரு வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என நீக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய நிலையில்,இதற்கு எதிர்க்கட்சிகள் கட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்துகிறது. அப்போது ஆதாரை ஆவணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், ஆதாரை சட்டப்பூர்வ குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது என தேர்தல் ஆணையகம்தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணையின் போது நீதிபதிகள், பீஹாரில் வாக்காளர் பட்டியல் சேர்த்தல் மற்றும் நீக்கும் பணிக்கு ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால், தேர்தல் ஆணையகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 7.24 கோடி வாக்காளர்களில் 99.6 சதவீதம் பேர் ஏற்கனவே ஆவணங்களை சமர்ப்பித்து விட்டனர். தற்போது ஆதாரை சேர்ப்பதால் எந்த பலனும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆதார் அட்டையின் உண்மைத்தன்மையை சரி பார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும், குடியுரிமைக்கான ஆவணமாக அதனை பயன்படுத்தக்கூடாது. ஆதாரை 12-வது ஆவணமாக ஏற்றுக் கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையகம் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Supreme Court orders Election Commission to accept Aadhaar in voter list