வழக்கறிஞர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் - நீதிமன்ற நேரத்தை மிச்சப்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு!
Supreme Court new rule for Lawyers
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்கும் நோக்கில், வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி அலுவலகம் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
முக்கிய வழிகாட்டுதல்கள்:
நேரத்தை அறிவித்தல்: மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பதிவுபெற்ற வழக்கறிஞர்கள் (AoR), தங்களின் வாய்மொழி வாதங்களுக்குத் தேவைப்படும் கால அளவை, விசாரணை தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் சமர்ப்பிப்பு: இந்தத் தகவலை, வழக்கறிஞர்களுக்காக ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 'வருகை சீட்டு' (Appearance Slip) ஆன்லைன் போர்டல் வாயிலாகவே தெரிவிக்க வேண்டும்.
சுருக்கமான குறிப்பு: வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களின் முக்கியக் குறிப்புகளை 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
காலக்கெடு: இந்த எழுத்துப்பூர்வக் குறிப்பை, அதன் நகலை எதிர் தரப்பினருக்கு வழங்கிய பிறகு, விசாரணைத் தேதிக்குக் குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
கண்டிப்பான உத்தரவு:
அனைத்து வழக்கறிஞர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும், தாங்கள் கோரிய நேரத்திற்குள்ளேயே வாய்மொழி வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நீதிமன்றத்தின் விலைமதிப்பற்ற நேரம் மிச்சப்படுத்தப்பட்டு, அதிகப்படியான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Supreme Court new rule for Lawyers