திருப்பதி கோவிலில் வழிபாடு மற்றும் பிரசாத பயன்பாட்டுக்கு நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்: கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம்..!
Supreme Court dismisses plea seeking permission to use only indigenous cow milk for worship and offering at Tirupati temple
திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் வழிபாடு மற்றும் பிரசாதத்திற்கு நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருப்பதி பாலாஜி கோவிலின் வழிபாடு மற்றும் பிரசாத பயன்பாட்டிற்கு நாட்டு மாடுகளின் பால் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என கோரி வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் மனுதார் சார்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், 'ஆகம சாஸ்திரங்களின்படி, நாட்டு மாடுகளின் பாலை பயன்படுத்துவது ஒரு அத்தியாவசிய பராம்பரியம் என்று குறிப்பிட்டார். அதற்கு நீதிபதி சுந்தரேஷ் பதிலளிக்கையில், ''இத்தகைய வகைப்பாடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மொழி, சாதி, சமூகம் அல்லது மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டவை. கடவுளால் விதிக்கப்பட்டவை அல்ல'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ''கடவுள் எல்லா மனிதர்களுக்கும் சமமானவர். அவர் அனைவருக்கும் கருணை காட்டுபவர். மற்ற உயிரினங்களிடமும் அதே கருணையை காட்டுபவர். கடவுள் ஒரு உள்ளூர் பசுவின் பாலை மட்டுமே விரும்புகிறார் என்று நீங்கள் கூற முடியாது. பசுவில் அனைத்து இனங்களும் பசுதான். மனுவை பரிசீலிக்க விரும்பவில்லை'' என்று கூறி கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
இதையடுத்து, மனுதாரர், மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் மனுதாரருக்கு தேவையெனில் அவர், மாநில உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
English Summary
Supreme Court dismisses plea seeking permission to use only indigenous cow milk for worship and offering at Tirupati temple