தாஜ்மஹாலுக்கு அதி உச்ச பாதுகாப்பு: ட்ரோன் எதிர்ப்பு கவசம் அமைக்க நடவடிக்கை..!
Steps to install a high security anti-drone shield for the Taj Mahal
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. இந்தப்படி, ட்ரோன் மூலம் வரும் ஆபத்துக்களை தடுத்து அழிப்பதற்கான பாதுகாப்பு கவசம் நிறுவப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
அதை எதிர்த்து பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. ட்ரோன் உதவியுடன் இந்திய நிலைகள் மீதும் பொதுமக்கள் மீதும் வழிபாட்டு இடங்கள் மீதும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் சீக்கியர்களின் தலைமை கோவிலாக கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோவில் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

இந்நிலையில், இது போன்ற தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் வரும் காலத்தில், நடத்தலாம் என உளவுத்துறையினர் கணித்துள்ளனர். அவ்வாறு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள நினைவுச் சின்னங்களில் ஒன்றாக தாஜ்மகால் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உத்தரபிரதேச மாநில போலீசார் இதனை பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது, உளவுத்துறை கணிப்பை முன்னிட்டு தாஜ்மஹாலுக்கு ட்ரோன் தடுப்பு கவச பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நவீன பாதுகாப்பு கவசம் ஆயுதங்களுடன் ஏவப்படும் ட்ரோன்களை முறியடிக்கும் வகையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Steps to install a high security anti-drone shield for the Taj Mahal