கேரளாவில் நிபா வைரஸுக்கு இரண்டாவது உயிரிழப்பு: கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம்!
Second death due to Nipah virus in Kerala Strict measures intensified
கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் உயிரை பலி வாங்கி வருகிறது.
பாலக்காடு மாவட்டத்தில் 58 வயதுடைய ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது வீட்டை சுற்றியுள்ள 3 கி.மீ. சுற்றளவு பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல், உடல் நலக்குறைவு காரணமாக, முதலில் இவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் நிலை மோசமடைந்ததால், பெரிந்தல்மன்னா மற்றும் மஞ்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட அவரது திரவ மாதிரிகள் நிபா வைரஸ் பாதிப்பு என உறுதியாகியதைத் தொடர்ந்து, கூடுதல் உறுதிப்படுத்தலுக்காக மாதிரிகள் புனே வைராலஜி ஆய்வகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.இறந்த நபரின் வீட்டை சுற்றியுள்ள 3 கி.மீ. சுற்றளவிலான பகுதிகளில் செல்லும் மற்றும் வெளியே வரும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இறந்த நபருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது.அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிபா அறிகுறிகளுடன் பெரிந்தல்மன்னாவில் சிகிச்சை பெற்று வந்த பாலக்காட்டை சேர்ந்த மற்றொரு நபரின் நிலையும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரளாவில் நிபா வைரஸ் ஆண்டுதோறும் சில பகுதிகளில், குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய இடங்களில் சீசன் போல் ஏற்படுவது தொடர்ந்து சவாலாக அமைந்துள்ளது. தற்போதைய பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
English Summary
Second death due to Nipah virus in Kerala Strict measures intensified