ஈரான் போரின் எதிரொலி; மருந்து மாத்திரைகள்; மருத்துவ பில்கள் விலை உயரும் அபாயம்; துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை..!
Risk of Rising Prices for Medicines and Medical Bills Due to the Impact of the Iran War
அமெரிக்கா - ஈரான் போர் இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த போரின் தாக்கத்தால் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மற்ற எல்லாத் துறைகளையும் போல இந்தியாவின் சுகாதாரத் துறையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது.
மத்திய கிழக்கு வளைகுடாவில் நடந்து வரும் போர் 4 வாரங்களாக நீடித்து வருகிறது, இவ்வாறு தொடர்ந்து நீடித்தால் மருத்துவ விநியோகச் சங்கிலிகளை அது அதிகமாக இறுக்கும் என்று மருத்துவ துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 வீதம் கடல் மார்க்கமான ஹார்முஸ் ஜலசந்தி போன்ற கப்பல் போக்குவரத்துப் பாதைகள் நீண்ட காலத்திற்குத் தடைபட்டிருந்தால், இந்த நெருக்கடி காலப்போக்கில் நோயாளிகளின் மருந்து மற்றும் மருத்துவமனை பில்கள் உயரும் அபாயத்திற்கு செல்லக்கூடும்.
ஏனெனில், இந்தியாவின் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துத் துறைகள், பிளாஸ்டிக் மற்றும் இடைநிலை இரசாயனங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள், சிறப்பு மூலப்பொருட்கள் ஆகியவை பெரும் அளவில் இறக்குமதி செய்யபப்டுகிறது. இந்த போர் காரணமாக முக்கிய வர்த்தகப் பாதைகளில் ஏற்படும் தாமதங்கள், அதிக சரக்குக் கட்டணங்கள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை ஆகியவற்றால், சுகாதார நிறுவனங்களுக்கான அடிப்படை செலவு அதிகரித்து வருகிறது.
இதனால், ஊசிகள், கையுறைகள், வடிகுழாய்கள் மற்றும் பிற நுகர்பொருட்கள் போன்ற பொருட்களின் உற்பத்தியாளர்கள், விநியோகத்திற்கான கால அவகாசம் அதிகரிப்பதாகவும், செலவுகள் உயர்வதாகவும் ஏற்கனவே தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை இது அன்றாட சேவைகளைப் பாதிக்கவில்லை என்றாலும், போர் நீடித்தால் இனிவரும் காலங்களில் மருத்துவ துறை மீது மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்தும் என ப்ளூம் IVF நிறுவனத்தின் IVF ஆலோசகரும் நிபுணருமான ரோஹன் பால்ஷேத்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் தெரிவித்துள்ளதாவது:
''நாங்கள் தற்போது மூலப்பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் சில உயர்தர உபகரணங்களை இறக்குமதி செய்வதையே நம்பியிருப்பதால், கொள்முதல் செய்வதற்கான செலவுகள் அதிகரிக்கக்கூடும். தற்போதுள்ள கையிருப்பு காரணமாக நோயாளிகளுக்கான கட்டணங்கள் இதுவரை உயரவில்லை என்றும், ஆனால் இந்தப் போர் தொடர்ந்தால் செலவுகள் அதிகரிக்கக்கூடும், இது நோயாளிகளை நேரடியாகப் பாதிக்கும்.'' என்று கூறியுள்ளார்.
English Summary
Risk of Rising Prices for Medicines and Medical Bills Due to the Impact of the Iran War