தாம்பரத்தில் தலைதூக்கும் ரவுடிசம்; கஞ்சா விற்பதில் இருவருக்கிடையே போட்டி; ரவுடியை சுத்துப்போட்டு அரிவாளால் வெட்டிய கும்பல்..!
Gang Surrounds and Hacks Rowdy with Sickle Amidst Dispute Over Ganja Sales in Tambaram
சென்னை தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான 29 வயதான கோல்டுமணி. இவர், பல வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் கோல்டுமணிக்கு போட்டியாக புதிதாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். நாளடைவில் கையில் அதிக காசு வந்ததும், தான் ஏரியாவில் பெரிய ரவுடி எனக் கூறிக்கொண்டு ஒரு கேங்காக உருவெடுத்துள்ளார்.
இதனால் கடுப்பான கோல்டுமணி, கடந்த ஜனவரி மாதம் வினோத்திடம் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளதோடு, அந்த ஏரியாவை விட்டுச் சென்றுவிடும்படி மிரட்டியிருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த வினோத் கோல்ட்மணியை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, தனது கூட்டாளியான சச்சினுடன் சேர்ந்து வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்து கோல்டுமணி வீட்டிற்கே சென்று, வெடிகுண்டு வீசியுள்ளார். அப்போது கோல்டுமணி நூலிழையில் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த ஓலை முயற்சி விவகாரத்தில் வினோத் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த தாம்பரம் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வினோத் நீதிமன்ற ஜாமீன் பெற்று தாம்பரம் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்துள்ளார். அப்போது வினோத்தை பழிவாங்க இதுதான் சரியான நேரம் என கோல்டுமணி களத்தில் இறங்கியுள்ளார். தனது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு வினோத்தை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார். அதன்படி, அவரை பின்தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், சம்பவத்தன்று வினோத் வீட்டின் அருகே சென்று கொண்டிருப்பதைப் பார்த்துள்ளனர்.
அப்போது ஆயுதங்களை கையில் எடுத்த கோல்டுமணி, அவருடைய சகோதரர் ஸ்ரீதர், நண்பர்கள் மாதேஷ், அஸ்வின், தினேஷ், வசந்த் ஆகியோர் வினோத்தை சுற்றிவளைத்து பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி தலைமறைவாகினர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய வினோத்தை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலீசார், கோல்டுமணி மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வந்த நிலையில் குறித்த கும்பல், திருநீர்மலை காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அதன்படி, கோல்டுமணி உட்பட ஆறு பேரை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணையில், வினோத்தின் நாட்டு வெடிகுண்டு வீச்சுச் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் தனது ரவுடி கேங்கை கோல்டுமணி கட்டமைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், பணத்திற்காக கஞ்சா விற்பனையை மீண்டும் தொடங்கியிருப்பதாகவும், இந்த முறை ஆந்திராவுக்குச் சென்று கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்த கோல்டுமணி, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமோக விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அதில் வரும் பணத்தை வைத்து சிறையில் இருந்து வினோத் வெளிவந்ததும், அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட கும்பலிடமிருந்து மூன்று பட்டாக்கத்திகள், ஆறு செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளன. இதனை தொடர்ந்து ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் மீண்டும் கஞ்சா விற்பனை தலைதூக்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
English Summary
Gang Surrounds and Hacks Rowdy with Sickle Amidst Dispute Over Ganja Sales in Tambaram