கூட்டணியில் அலட்சியம் செய்ததால் இரண்டு தொகுதிகளில் தனித்து போட்டி; சிபிஎம் கே. பாலகிருஷ்ணன்..!
CPMs K Balakrishnan announces that the party will contest independently in two constituencies due to negligence within the alliance
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிவுகள் மே 04 -ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவை முடிவடைந்து, இன்று வேட்புமனு திரும்பப் பெறுதலும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் 16 தொகுதிகள், திமுக 14 தொகுதிகள் எனவும் உடன்பாடு ஏற்பட்டது. இதில், திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுக்கு தலா ஒரு தொகுதி எனவும் ஒப்பந்தம் முடிவானது.
அதன்படி திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், விசிகவுக்கும் திமுக தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்த நிலையில், விசிகவுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்தத் தொகுதியில் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் போட்டியிடுகிறது.
அடுத்ததாக, விசிக ஊசுடு, நெட்டப்பாக்கம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, விசிக உழவர்கரை, ஊசுடு, நெட்டப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சிக்கு ஒரு தொகுதிக்கூட ஒதுக்கப்படவில்லை என்பதால், அக்கட்சி நான்கு தொகுதிகளில் தனித்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாளான இன்று இரண்டு தொகுதிகளில் தனது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது.
தற்போது புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் ராஜாங்கம் மற்றும் திருபுவனை தொகுதியில் தட்சணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதாவது, கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், சிபிஎம் தனித்து போட்டியிடுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது; ''இந்தியா கூட்டணியில் ஒரு தொகுதியாவது ஒதுக்க வேண்டும் என கேட்டோம். ஆனால், எங்களை அலட்சியப்படுத்தினார்கள். இதனால், லாஸ்பேட்டை தொகுதியில் ராஜாங்கம் மற்றும் திருபுவனை தொகுதியில் தட்சணமூர்த்தி ஆகியோரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளோம். மற்றத் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
CPMs K Balakrishnan announces that the party will contest independently in two constituencies due to negligence within the alliance