பெண்களை தரம் தாழ்ந்து விமர்சித்த தி.மு.க ஆதரவாளர் பொன்ராஜ் மீது சட்ட நடவடிக்கை; டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ள தவெக தலைவர் விஜய்..!
TVK leader Vijay has lodged a complaint at the DGPs office demanding legal action against Ponraj for making derogatory remarks about women
தவெகவை விமர்சித்து, திமுக ஆதரவு செயல்பாட்டாளராக விளங்கும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ், ஒரு யூடியூப் பேட்டியில் பேசினார். அப்போது அவர் தமிழக பெண்கள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியிருந்தார். இதற்கு தவெக நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா மற்றும் அக்கட்சித் தலைவர் விஜய் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்ற அக்கட்சியின் தலைவர் விஜய், "நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் கடிதத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளதாவது;
''ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவே பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TVK leader Vijay has lodged a complaint at the DGPs office demanding legal action against Ponraj for making derogatory remarks about women