உள்நாட்டு தயாரிப்பில் உருவான 120 கி.மீ., இலக்கை தாக்கும் 'பினாகா' ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றி; ராஜ்நாத் சிங் பாராட்டு..!
Rajnath Singh congratulates on the successful first test of the Pinaka rocket
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் நகரில் உள்ள சோதனைத் தளத்தில் இருந்து, 120 கி.மீ., இலக்கை தாக்கும் 'பினாகா' ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டமைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'பினாகா' ராக்கெட் அதன் அதிகபட்ச வரம்பான 120 கி.மீ.க்கு இலக்கை தாக்கி சோதிக்கப்பட்ட நிலையில்,குறித்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உட்பட பணியாற்றிய அனைவருக்கும் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
இந்த சோதனை ராணுவத்தின் திறன்களை அதிகரிக்கும், ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளதோடு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓவின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், சோதனையை நேரில் பார்வையிட்டு, பணியாற்றிய அனைவரையும் பாராட்டியுள்ளார்.

பினாகா ராக்கெட்டுகள் 120 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த பினாகா ராக்கெட்டுகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தினால் (DRDO) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட்டுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்கனவே, தென்மேற்கு ஆசிய நாடான ஆர்மீனியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
English Summary
Rajnath Singh congratulates on the successful first test of the Pinaka rocket