திறந்தவெளியில் சிறுநீர் கழித்த விவகாரம்; தட்டிக்கேட்ட ரயில்வே உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து; புதுச்சேரி ரயில் நிலையத்தில் பரபரப்பு..!
Railway Assistant Sub Inspector Stabbed for Confronting Fake Godman Urinating in the Open at Puducherry Railway Station
திருச்சியை சேர்ந்தவர் 40 வயதான சரவணன் என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய ரயில்வே பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்பு உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏஎஸ்ஐ) பதவி உயர்வு பெற்று, புதுச்சேரி ரயில் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல், திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு போலி சாமியார் ஒருவர் ரயிலில் வந்து இறங்கியதுடன், ரயில் நிலையத்தின் உள்ளே திறந்தவெளியில் சிறுநீர் கழித்துள்ளார். அப்போது அவரை சரவணன் அழைத்து கண்டித்து ரயில் நிலையத்திலிருந்து வெளியே அனுப்பியுள்ளார்.
ஆனால், சிறிதுநேரம் கழித்து மீண்டும் ரயில் நிலையத்துக்குள் வர போலி சாமியார் முயன்ற நிலையில், அவரை சரவணன் அனுமதிக்க மறுத்துள்ளார். அப்போது அவர் 'நான் மதுரைக்கு செல்ல வேண்டும்' என கூறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பணியிலிருந்த சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டிய போலி சாமியார், அவரது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதனை எதிர்பாராத சரவணன் உடனே அவரை பிடிக்க முயன்ற போது இடது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றுள்ளார். வலி தாங்க முடியாமல் கதறிய நிலையில், சக போலீசார் மற்றும் ஊழியர்கள் ஓடிவந்து போலி சாமியாரை சுற்றிவளைத்துள்ளனர். உடனடியாக சரவணன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு கையில் நரம்பு துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவரை மேலதிக சிகிச்சைக்காக ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த நிலையில், ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது பிடிபட்ட போலி சாமியாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில், அவர், தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மணிகண்டன் (46) என்பதும், காசிக்கு சென்றுவிட்டு மதுரை திரும்பும் வழியில் திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக புதுச்சேரியை சுற்றிப் பார்க்க வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்து, வழக்குபதிவு செய்து கைது செய்த நிலையில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
Railway Assistant Sub Inspector Stabbed for Confronting Fake Godman Urinating in the Open at Puducherry Railway Station