''நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்''; ராகுல் காந்தி..!
Rahul Gandhi says the central government should be held responsible for the police action against students
தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி சிஜேபி இயக்கத்தினர் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில், மாணவர்களுடன் மாணவர்களாக சமூக விரோதிகளும் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது பாராளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர். அப்போது பொலிஸாரின் அனுமதியை மீறி தடுப்பு சுவர்களை தாண்டி சிஜேபியினர் சென்றதால் போலீசார் -போராட்டக்காரர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதன் போது போலீசார் மீது மாணவர்கள் போர்வையில் இருந்த சமூக விரோதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலாக கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி தாக்குதல், மற்றும் கண்ணீர்ப்புகை வீசினர். இதன்போது இருதரப்பிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரபல ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இது குறித்து கூறியுள்ளதாவது;

''டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது மாணவர்கள் மீது காவல் துறை ‘முட்கள் பதிக்கப்பட்ட லத்திகள்’ மற்றும் துகள் துப்பாக்கிகளை (பெல்லட் கன்ஸ்) பயன்படுத்தியது.
இதில் பல மாணவர் போராளிகளுக்கு எலும்பு முறிவு, வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பிஹாரின் சியான் நகரில், ஏ.கே-47 உள்ளிட்ட துப்பாக்கிகளால் சுடப்பட்டதில் பல போராளிகள் காயமடைந்தனர்.
உயர்மட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி இதுபோன்ற நடவடிக்கையை காவல் துறை எடுத்திருக்காது. போராட்டக் களத்தில் குவிக்கப்பட்டிருந்த டெல்லி காவல் துறையும், விரைவு அதிரடிப் படையும் (ஆர்ஏஎப்) உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவை்.

இதற்கு இரண்டு சாத்தியக்கூறுகள் மட்டுமே உள்ளன. முதலாவதாக, மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய உள் துறை அமைச்சர் அனுமதி அளித்திருப்பார் - அப்படியானால் அவர் குற்றவாளி. இரண்டாவதாக, இது நடந்தது அவருக்குத் தெரியவில்லை - அதாவது அவர் முற்றிலும் திறமையற்றவர். எவ்வாறாயினும், உள்துறை அமைச்சராக, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் இளைஞர்களுக்கு உறுதுணையாக நிற்கும். இளைஞர்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Rahul Gandhi says the central government should be held responsible for the police action against students