லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காத ஆத்திரம்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் வாயில் காலாவதியான பிஸ்கட்டை திணிக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு..!
Public tries to stuff expired biscuits into FDA officials mouth after he accepts bribe but fails to take action
மகாராஷ்டிராவில், FDA அதிகாரி ஒருவரை, காலாவதியான பிஸ்கட்டுகளைத் சாப்பிடுமாறு பொதுமக்களால் வாயில் திணித்து மிரட்டப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் கடையில், நொறுக்குத் தீனி வாங்கி சாப்பிட்ட 02 வயதுக் குழந்தைக்கு திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் இதுகுறித்து எஃப்டிஏ (FDA) அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஃப்டிஏ அதிகாரி அந்த பாக்கெட் கடையில் சோதனையைத் தொடங்கினார்.
ஆனால், சோதனை நடப்பதற்கு முன்பே, குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திய நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் கடையிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர். அத்துடன், கடையில் சோதனையிட்டபோது பல காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு அதிகாரியால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், கடைக்காரர் மீது எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அந்த அதிகாரி கடைக்காரரிடமிருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு பிரச்சினையை முடிக்க முயன்றதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த அதிகாரியைச் முற்றுகையிட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகளை அவர் மீது எறிந்து, "இதை நீங்களே சாப்பிடுங்கள்" என்று கத்தினர். கோபத்தின் உச்சத்திலிருந்த சிலர், அந்த அதிகாரியின் வாயில் காலாவதியான பிஸ்கட்டுகளை பலவந்தமாக திணிக்கவும் முயன்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மீறல்கள், உணவு கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு எதிராக எஃப்டிஏ தீவிர சோதனைகளை நடத்தி வரும் வேளையில், துறையைச் சேர்ந்த அதிகாரியே லஞ்சக் குற்றச்சாட்டில் சிக்கி மக்களால் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Public tries to stuff expired biscuits into FDA officials mouth after he accepts bribe but fails to take action