'சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள்': பிரதமர் மோடி..!
Prime Minister Modi says people believe that CP Radhakrishnan will be an excellent Vice President
இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நாளை ( செப்டம்பர் 09) நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பாஜ எம்பிக்களுக்கு பயிற்சி நடைபெற்றுள்ளது. அத்துடன், நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:
'டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றேன், இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். திரு. சி.பி. ராதாகிருஷ்ணனின் வேட்புமனு அனைவரிடமும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்றும், தனது ஞானத்தாலும், நுண்ணறிவாலும் அலுவலகத்தை வளப்படுத்துவார் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.' என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன்,நேற்று நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்க தேசிய ஜனநாயக எம்பிக்கள், 'சுதேசி மேளா'விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மோடி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய அரசு எடுத்த ஜிஎஸ்டி குறைப்பு மூலம் ஒரு அலை உருவாகியுள்ளது. இதனை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியதாகவும்,' மேட் இன் இந்தியா' தயாரிப்பை ஊக்கப்படுத்த எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பு கண்காட்சியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், துணை ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் அனைவரும் தங்களது ஓட்டை சரியான முறையில் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், ஒரு ஓட்டும் வீணாகக்கூடாது என்று பிரதமர் மோடி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Prime Minister Modi says people believe that CP Radhakrishnan will be an excellent Vice President