துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள், தேசிய கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து..!
Prime Minister Modi hosts dinner for National Alliance MPs on the first day of the Vice Presidential election
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 09-ந்தேதி நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மஹாராஷ்டிரா ஆளுநர் மற்றும் தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 'இந்தியா' கூட்டணி சார்பில் எதிர்கட்சி வேட்பாளராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 09-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 06 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு, இரவு 07.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் 50 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி, சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால், இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்பார். இந்நிலையில், தேர்தலுக்கு முதல் நாளான செப்டம்பர் 08-ந்தேதி தேசிய கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கவுள்ளார். அவர்களுடன் உரையாடவும் உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் மற்றும் பிணைப்புகளை வளர்க்கவும், இதுபோன்ற உரையாடல்கள் எப்போதும் பலனளிக்கும் என கடந்த கால நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
English Summary
Prime Minister Modi hosts dinner for National Alliance MPs on the first day of the Vice Presidential election