11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு; எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனுதாக்கல்..!
Petition filed against Edappadi Palaniswami seeking CBI probe into alleged irregularities in the construction of 11 medical colleges
அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.
குறித்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், புகார் அளித்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது புகார் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் புகார் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவது போல் உள்ளது.
எனவே, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணைக்கான அனுமதியை திரும்ப பெற்ற அரசாணையை ரத்து செய்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Petition filed against Edappadi Palaniswami seeking CBI probe into alleged irregularities in the construction of 11 medical colleges