பீகார் தேர்தல்: கூட்டணியை மதிக்காமல் நேருக்கு நேராய் மோதும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள்..!
Opposition alliance candidates clash head on in Bihar elections ignoring alliances
பீஹார் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 06 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 14-இல் ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் நெருங்குகின்ற நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம், தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் களம் வேகம் எடுத்துள்ளது. இதில் ஆளும் கட்சிக் கூட்டணியை விட எதிர்க்கட்சியில் கூட்டணியை மதிக்காமல் இஷ்டம் போல் வேட்பாளர்களை அறிவித்து வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகள் ராஷ்டிரிய ஜனதா தளம். காங்கிரஸ், சிபிஐ மற்றும் ஏனைய சிறு, சிறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரே தொகுதிக்காக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் முண்டாசு தட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளன.

அதன்படி, வைஷாலி தொகுதியில் சஞ்சீவ்குமார் என்பவருக்கு காங்கிரஸ் சீட் கொடுத்துள்ளது. ஆனால், இதே தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியான ராஷ்டிரிய ஜனதா தளம் சின்னத்துடன் வேட்பாளர் அஜய் குஷ்வாஹா களம் இறங்கியுள்ளார். இந்த கூட்டணியின் தலைமையே ராஷ்டிரிய ஜனதா தளம்.
அதேப்போல, லால்கஞ்ச் தொகுதியில் உள்ளூரின் பிரபல பிரமுகர் முன்னா சுக்லாவின் மகள் ஷிவானி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ஆதித்யகுமார் ராஜா என்ற வேட்பாளரை காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.
மேலும், பாச்வாரா தொகுதியில் போட்டியிடுவதிலும் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் குழப்பநிலை. இங்கு சிபிஐ வேட்பாளர் அவதேஷ் குமார் ராய் சுயேட்சையாக போட்டியிடுகிறார். (இவர் ஒரு முன்னாள் எம்எல்ஏ. 2000ம் ஆண்டு தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளரிடம் வெறும் 464 ஒட்டுகளில் வெற்றியை இழந்தவர்). இவரை எதிர்த்து போட்டியிடுவது காங்கிரஸ் வேட்பாளர் ஷிவபிரகாஷ் கரிப்தாஸ் களமிறங்கியுள்ளார்.

அத்துடன், கவுராபாரம் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளராக அப்சல் அலிகான் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் கூட்டணி கட்சியான விகாஷீல் இன்சான் பார்ட்டி தலைவர் முகேஷ் சஹானியின் சகோதரர் சந்தோஷ் சாஹ்னி களத்தில் உள்ளார்.
அதேப்போல, சமஸ்திபூர் மாவட்டத்தின் ரோசெரா தொகுதியில் சிபிஐ வேட்பாளராக லஷ்மண் பாஸ்வான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இங்கு காங்கிரஸ் வேட்பாளராக விகே ரவி உள்ளார். ராஜபாக்கர் தொகுதியில் பிரதிமா தாஸ் காங்கிரஸ் வேட்பாளராகவும், சிபிஐ (எம்எல்) வேட்பாளராக மோஹித் பாஸ்வானும் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து, பிஹார்ஷரிப் தொகுதியில் இதே கூட்டணி கட்சிகள் அதே போர்முலாவுடன் களமிறங்கியுள்ளது. அதாவது, இங்கும் காங்கிரஸ் வேட்பாளர் உமேர் கான், சிபிஐ வேட்பாளர் சதிஷ் யாதவ் களம் இறங்குகின்றனர்.
இப்படி, கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளே ஆளாளுக்கு நேர்எதிராய் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது கூட்டணியில் ஒற்றுமை இல்லாததையே காட்டுகிறது. அத்துடன், வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிகள் ஒதுக்கீடு போன்றவற்றில் இத்தனை குழப்பங்கள், இது நிச்சயம் ஓட்டுபதிவு மற்றும் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Opposition alliance candidates clash head on in Bihar elections ignoring alliances