பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் - சீமான்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், மதுராந்தகம் அருகே கடந்த 09.03.26  இரவு 16 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தியும், சென்னை அடையாறில் 22 வயது கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியும் அதிர்ச்சியையும், பெரும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்கு, ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை நிகழ்வும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

 பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல், சாலையில் செல்வோர் மீது தாக்குதல், சிறு வியாபார கடைகளைத் தாக்கி உடைப்பது, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் என மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத அளவிற்கு தமிழ்நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. பள்ளி சிறுமிகள் முதல், 80 வயது பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெருந்துயரங்கள் நாளும் அரங்கேறுகின்றது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுநிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பிறகும் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததே கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அவலம் நிகழ காரணமாகியது. அதன் பிறகும் திமுக அரசின் தொடர் அலட்சியமே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தையும், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவியும்,  ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும், தற்போது மதுராந்தகத்தில் 16 வயது சிறுமியும், சென்னையில் 22 வயது கல்லூரி மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்தேற காரணமாகும். திமுக ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட போகிறார்களோ என்ற பேரச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்காமல் இந்த குற்றங்களை ஒழிக்கவே முடியாது. மதுவையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கக்கூடிய அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்டு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? இதுதான் பெண்களின் வாழ்வை முன்னேற்றும் திமுக அரசின் செயல்முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? தேர்தல் அறிவிக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே கூட்டணி பேரத்தில் காட்டும் ஆர்வமும் அக்கறையும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காட்டாதது ஏன்? 

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி காலத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்குகள் எத்தனை?  அவற்றில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? எத்தனை வழக்குகள் கைவிடப்பட்டன? போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய வழக்குகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பம் என்பதிலிருந்தே அந்த சட்டத்தையும், பெண்களின் பாதுகாப்பையும்,  மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு. 

1000, 2000, 2500 என்று உரிமைத்தொகை தரும் திராவிட கட்சிகள் பெண்களின் பாதுகாப்பிற்கு எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் அறிவிக்காதது ஏன்? பெண்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் உறுதிப்படுத்துவதே  பெண்களுக்கு வழங்கும் உண்மையான உரிமையாகும்.

ஆகவே, விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை புரிந்து படுகொலை செய்யப்பட்ட  12 ஆம் வகுப்பு மாணவி மற்றும் மதுராந்தகம் அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியையும்,  சென்னை அடையாறில் கல்லூரி மாணவியையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடுங் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க  உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென ஒன்றிய - மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ntk seeman condemn to woman against crime


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->