அதிகரிக்கும் கொரோனா பரவல்: கர்நாடகாவில் ஒருவர் பலி; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்..!
One person dies of Corona in Karnataka Advice to wear face masks
ஆசியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந் நிலையில், கர்நாடகாவில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்று அம்மாநில சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில் தற்போது இரட்டை இலக்கத்தை கடந்துள்ளது. இந்நிலையில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் சித்தராமையாவுடன், சுகாதார அமைச்சர் சரண் பிரகாஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர்நிருபர்களிடம் அவர் கூறியதாவது;-

நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் அச்சப்பட வேண்டியது இல்லை என்றும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் சூழலில் மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மாணவர்கள் பள்ளிக்கு மீண்டும் செல்ல இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு சளி, தலைவலி, காய்ச்சல் என்று ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கொரோனா பரிசோதனைகளுக்கான அனைத்து வசதிகளும் தயார்நிலையில் வைத்திருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
One person dies of Corona in Karnataka Advice to wear face masks