2030-ஆம் ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Official announcement that the Commonwealth Games will be held in India in 2030
2030-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில், குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி காமன்வெல்த் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டிகள், அடுத்து 2026-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 02 வரை நடைபெறவுள்ளது.
காமன்வெல்த் அமைப்பில் உள்ள 74 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து இருந்தது. அதன்படி, குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இப்போட்டிகளை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனையடுத்து, காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத் வந்து ஆய்வு செய்திருந்தனர்.

இந்நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2030-ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது. இது விளையாட்டுத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடக்க உள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது மகிழ்ச்சி. இந்திய மக்களுக்கும், விளையாட்டு அமைப்புகளுக்கும் வாழ்த்துகள். நமது கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் மனப்பான்மை ஆகியவையே, இந்தியாவை உலக விளையாட்டு வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டுகளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட நாங்கள் ஆவர்மாக உள்ளோம். உலகத்தை வரவேற்க நாங்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறோம்'' என்று அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
அத்துடன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா , உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் , குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
English Summary
Official announcement that the Commonwealth Games will be held in India in 2030