தேசிய நெடுஞ்சாலை – மோசமான சாலைக்கு சுங்கம் வசூலிக்க முடியாது : உச்சநீதிமன்றம் கண்டனம்
National Highway Toll cannot be collected for bad roads Supreme Court condemns
திருச்சூர் :கேரள மாநிலம் எடப்பள்ளி – மன்னுத்தி இடையேயான தேசிய நெடுஞ்சாலை, தற்போது மிக மோசமான நிலையில் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுவதால், அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசலும் உருவாகி வருகிறது.
திருச்சூர் மாவட்டம் பளியெக்கரா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில், மோசமான சாலை நிலையிலும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், கேரள உயர்நீதிமன்றம், “சாலை பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. சுங்கம் செலுத்தும் மக்கள் பாதுகாப்பான மற்றும் சீரான சாலையில் பயணம் செய்யும் உரிமை பெற்றவர்கள். அதுதான் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடமை” என வலியுறுத்தி, 4 வாரங்களுக்கு சுங்க வசூலிக்க தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது.
விசாரணையின் போது தலைமை நீதிபதி, “65 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுத்தது என்பது மிகவும் அதிர்ச்சிகரமானது. சாலைகள் சீரமைக்கப்படாமல் இருக்கும் நிலையில், பொதுமக்களிடம் ரூ.150 சுங்கம் வசூலிப்பதற்கான காரணமே இல்லை” என கடுமையாக கேள்வி எழுப்பினார். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்படும் நெரிசல்கள், பள்ளங்கள், மேடுகள் ஆகியவை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திறமையின்மையை வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் விமர்சித்தார்.
இறுதியாக, கேரள உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மேல்முறையீட்டை முழுமையாக தள்ளுபடி செய்தது. இதன் மூலம், மோசமான சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என்ற சட்டபூர்வ நிலைமை தெளிவானது.
English Summary
National Highway Toll cannot be collected for bad roads Supreme Court condemns