142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டு, காட்டு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுருளியாறு, சுரங்கனாறு, வறட்டாறு ஆகிய பகுதிகளில் வெள்ள பெருக்கு எற்பட்டது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கூடுதலாக தண்ணீர் சேர்ந்து முல்லைப் பெரியாற்றில் தண்ணீர்  கரைபுரண்டு ஓடுகிறது. 

பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்த வழிகாட்டுதலின்படி, ரூல்கர்வ் நடைமுறை பின்பற்றப்பட்டது அதன்படி அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அணையில் 142 அடி அளவிற்கு நீர்மட்டத்தை பராமரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் அதிமுக -வினர் ஒன்று திரண்டு போராட்டத்தையும் அண்மையில் நடத்தி இருந்தனர். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனையடுத்து முல்லைப்பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கேரளத்துக்கு உபரி நீர் செல்லும் வழியில் உள்ள கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் அணைப் பகுதிக்கு நேரில் சென்று, ரூல்கர்வ் விதிப்படி அணையிலிருந்து நான்கு மதகுகள் வழியாக கேரளத்துக்கு வினாடிக்கு 1682 கனஅடி உபரிநீர் செல்வதை ஆய்வு செய்தனர். 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த 2014ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது 4-வது முறையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தமிழக பொதுத் துறை பொதுப்பணித்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை காலை நீர்வரத்து வினாடிக்கு 5,665 கனஅடியாக இருந்தது தேக்கடி தலைமதகு மூலம் 2,300 கனஅடி நீர் தமிழகத்தில் வெளியேற்றப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உபரி நீர் வழிந்தோடிகள் வழியாக கேரள பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு, ரூல்கர்வ் நடைமுறைப்படி அணை நீர்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து லோயர் கேம்பில் உள்ள பென்னி குயிக் மண்டபத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுகவினர் சென்று அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் விவசாய சங்கத்தினரும் பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mullaiperiyar dam water level is 142 feet


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->