வாகன ஓட்டிகளே இனி டோல் கேட்டில் நிற்க வேண்டாம்.. பயன்பாட்டிற்கு வந்த தடையற்ற 'MLFF' வசூல் முறை!
Motorists no more waiting at the toll gate The seamless MLFF collection system has been introduced
இந்திய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது நீண்டகால சிக்கலாக இருந்து வருகிறது. FASTag அறிமுகத்தால் காத்திருப்பு நேரம் குறைந்திருந்தாலும், தடுப்புகள் மற்றும் வாகன நெரிசல் காரணமாக முழுமையான தடையற்ற பயணம் இன்னும் சாத்தியமாகவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வாக மத்திய அரசு தற்போது ‘மல்டி லேன் ஃப்ரீ ப்ளோ’ (Multi Lane Free Flow - MLFF) எனப்படும் புதிய சுங்க வசூல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டம் முதன்முதலாக குஜராத் மாநிலத்தின் NH-48 நெடுஞ்சாலையில் உள்ள சூரத்–பருச் பிரிவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சோரயாசி சுங்கச் சாவடியில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதை தொடங்கி வைத்து, இந்திய நெடுஞ்சாலை அமைப்பின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இது முக்கிய கட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
MLFF முறையின் சிறப்பம்சம் என்னவென்றால், வாகனங்கள் டோல் கேட்களில் நிற்கவேண்டிய அவசியமே இருக்காது. FASTag மற்றும் Automatic Number Plate Recognition (ANPR) கேமரா தொழில்நுட்பம் மூலம் வாகன எண் மற்றும் டேக் விவரங்கள் தானாக பதிவு செய்யப்பட்டு, சுங்கக் கட்டணம் நேரடியாக கணக்கிலிருந்து கழிக்கப்படும். இதனால் தடுப்புகள் இல்லாமல் வாகனங்கள் வழக்கமான வேகத்தில் செல்ல முடியும்.
இந்த முறையின் மூலம் பயண நேரம் குறையும், எரிபொருள் சேமிக்கப்படும், வாகன நெரிசல் குறையும், சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பண்டிகைக் காலங்களில் டோல் கேட்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இது பெரிய தீர்வாக அமையும்.
மேலும், சரக்கு போக்குவரத்து துறைக்கும் இந்த முறை அதிக பயன் அளிக்கும். லாரிகள் மற்றும் வணிக வாகனங்கள் இடையூறு இல்லாமல் வேகமாகச் செல்ல முடிவதால் போக்குவரத்து திறன் உயரும்.
சூரத்–பருச் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த MLFF திட்டம் தற்போது முன்னோட்ட முயற்சியாக செயல்படுகிறது. இது வெற்றிகரமாக அமல்பட்டால், நாடு முழுவதும் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த முறை விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டோல் கேட்களில் காத்திருக்கும் பழக்கம் குறைந்து, வேகமான மற்றும் தடையற்ற நெடுஞ்சாலைப் பயணம் ஒரு புதிய நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Motorists no more waiting at the toll gate The seamless MLFF collection system has been introduced