மக்கள் தொகையை விட அதிக கார்டுகளா...? மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர உத்தரவு...! - அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அதிரடி ஆக்ஷன்...!
More cards than population Emergency orders issued district collectors Assam Chief Minister Himanta Biswa Sarma bold action
இந்தியாவின் கிழக்குப் பகுதி எல்லையை ஒட்டியுள்ள வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் நுழைந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, உரிய ஆவணங்கள் இன்றி நாட்டுக்குள் நுழையும் நபர்கள் கூட எளிதில் ஆதார் அடையாள அட்டைகளைப் பெற்றுவிடுகின்றனர் என்ற விவகாரம் அசாம் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியிருந்தது.

இந்த நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய மக்கள் பதிவேடு எனப்படும் குடியுரிமைப் பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்படும் என்ற நடைமுறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சட்டவிரோத குடியேற்றத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதிலும், தகுதியற்ற நபர்கள் ஆதார் பெறுவதை தடுப்பதிலும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பார்பேட்டா, துப்ரி, மரிகாவ் மற்றும் நாகோன் உள்ளிட்ட சில மாவட்டங்களில், அப்பகுதியின் மொத்த மக்கள்தொகையை விட ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.இந்த சூழ்நிலையில், அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதன்முறையாக ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆதார் அடையாள அட்டைகளைப் பெறுவதை முற்றிலும் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சிறப்பு மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே ஆதார் அட்டை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், அதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்கு விரிவான பரிந்துரையை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.அசாமில் ஆதார் பதிவு பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் ஆதார் பதிவு விகிதம் 100 சதவீதத்தைத் தாண்டியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள்தொகையை விட அதிக எண்ணிக்கையில் ஆதார் அட்டைகள் எவ்வாறு வழங்கப்பட்டன, கூடுதலாக அடையாள அட்டைகளைப் பெற்றவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பதைக் கண்டறிய அரசு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் வங்காளதேச குடியேற்றவாசிகள் எவரும் இந்திய அடையாள ஆவணங்களைப் பெற முடியாத வகையில் கடுமையான கண்காணிப்பு மற்றும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதாகவும், மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் குடியுரிமை விவகாரங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
English Summary
More cards than population Emergency orders issued district collectors Assam Chief Minister Himanta Biswa Sarma bold action