இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு; மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யநாதெல்லா அறிவிப்பு..!
Microsoft CEO Satyanathella announces investment of Rs 15700000000000 in India
இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா அறிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள சத்யநாதெல்லா, இன்று (டிசம்பர் 09) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதம் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.'' என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
''செயற்கை நுண்ணறிவு துறையைப்பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன. சத்ய நாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.'' என்று மோடி கூறியுள்ளார்.
இதேவேளை, ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், ஆசியாவிலையே அதிக அளவில், இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Microsoft CEO Satyanathella announces investment of Rs 15700000000000 in India