7 மாத குழந்தையை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!
Life imprisonment for the father who killed his 7-month-old baby
குடிக்க பணம் தராததால் 7 மாத குழந்தை அடித்துக்கொன்ற நாகேந்திராவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் கனககிரி பகுதியை சேர்ந்த நாகேந்திரா, ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை இருந்தது. காய்கறி வியாபாரியான நாகேந்திரா மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து ரம்யாவை தாக்கி உள்ளார்.
இந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நாகேந்திரா மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். மதுகுடிக்க மீண்டும் பணம் கேட்டுள்ளார்.அதற்கு ரம்யா மறுத்துள்ளார். அப்போது குழந்தையை தாக்கி உள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே குழந்தை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து நாகேந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து நாகேந்திரா ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதுதொடர்பான வழக்கு மைசூரு மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி வி.எச்.தயானந்த் தீர்ப்பு வழங்கினார். அதில், 7 மாத குழந்தை அடித்துக்கொன்ற நாகேந்திராவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
English Summary
Life imprisonment for the father who killed his 7-month-old baby