அரசு மருத்துவமனை அலட்சியத்தால் ஐந்து குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று!
jharkant govt hospital HIV
ஜார்கண்ட் மாநிலத்தில் சைபாசா அரசு மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள இந்த மருத்துவமனையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சீராக ரத்த மாற்றுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில், அந்த மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து பெற்ற ரத்தம் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது.
இதில் ஒரு குழந்தையின் பெற்றோர், ரத்த வங்கியில் எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். இந்த புகாரைத் தொடர்ந்து சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மொத்தம் ஐந்து குழந்தைகள் எச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், ரத்த பரிசோதனையில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும், மருத்துவமனை ரத்த வங்கியில் பரிசோதனை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
தலசீமியா நோய்க்காக தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள், மருத்துவமனை அலட்சியத்தால் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த வங்கியில் உள்ள மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
jharkant govt hospital HIV