பதற வைக்கும் ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு காணொளி!
Jammu and Kashmir landslide video
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள சோம்ரோலி பகுதியின் நர்சூ சந்தையில் காலை 11.30 மணியளவில் மலைச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திடீர் நிலச்சரிவால் புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் அருகிலிருந்த இரண்டு கடைகள் கடுமையாக சேதமடைந்தன. மண் சரிவு ஏற்பட்டபோது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
சம்பவத்திற்குப் பின் மீட்புப்படையினர், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். நிலச்சரிவால் சாலைகள் சேதமடைந்ததால், போக்குவரத்தும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
உதம்பூர் மாவட்ட நிர்வாகம், மீட்புப் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெறுவதாகவும், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் மீண்டும் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகள், கட்டிடங்கள் அமைக்கும் போது நிலத்தடி பரிசோதனைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
English Summary
Jammu and Kashmir landslide video