பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அவர்கள் மூடவேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்..!
Jaishankar insists that Pakistan should hand over terrorists to India
''இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, '' என டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாடுகளின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம் என்றும், பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என ஐ.நா., தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக, கடந்த 07-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தானுடனான நமது உறவு மற்றும் பிரச்னை என்பது நிச்சயம் இரு தரப்பானது. பல ஆண்டுகளாக இதே நிலைப்பாடு தொடர்கிறது. இதில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார் என்றும், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது என்றும், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அவர்கள் மூட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு என்னசெய்ய வேண்டும் என அவர்களுக்கு நன்றாக தெரியும் எனவும், பயங்கரவாதம் குறித்து என்ன செய்ய வேண்டும் என அவர்களுடன் பேச தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதகவே இருக்கும் என்றும், காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டிய விஷயம் இருக்கும் ஆனால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து அந்நாடு வெளியேறுவதே ஆகும் என்றும் இது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் பேசுகையில், இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை சிக்கலானது எனவும், எந்த வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருநாடுகளும் செயல்பட வேண்டும் என்றும், வர்த்தக ஒப்பந்தத்தில் இதுவே எதிர்பார்க்கப்படும் என்றும், அது செய்யப்படும் வரை, அது குறித்த எந்த கணிப்பும் சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்ற நமது நோக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்றும், இந்த தாக்குதல் தொடங்கிய போது, பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது மட்டுமே குறிவைத்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ராணுவம் மீது அல்ல என்ற செய்தியை அனுப்பினோம். இதில் தலையிடாமல் விலகியிருக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்தது, ஆனால், அவர்கள் நல்ல அறிவுரையை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், 10-ஆம் தேதி காலை அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்துவது யார் என்பது தெளிவாக தெரிகிறது. என்று நிருபர்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Jaishankar insists that Pakistan should hand over terrorists to India