துணை ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தை ஜக்தீப் தன்கர் காலி செய்துள்ளார்..!
Jagdeep Dhankhar has vacated the Vice Presidents official residence
நாட்டின் 14 வது துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், கடந்த ஜூலை 21 -ஆம் தேதி, உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின்னர் 40 நாட்களுக்கு பிறகு அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு இந்திய தேசிய லோக் தள கட்சியின் தலைவர் அபய் சவுதாலாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குடியேறினார்.
திடீரென அவர் பதவி விலகியது மத்திய அரசுடன் மோதல் போக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அரசு விதிகளின்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வசிப்பதற்கான பங்களாவை ஒதுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ஜக்தீப் தன்கருக்கான பங்களாவையும் தயார் செய்துள்ளது. ஆனாலும், அந்த பங்களாவுக்கு செல்வது குறித்து இன்னும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
மேலும், கடந்த வாரம் ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை பெறுவதற்காக அவர் விண்ணப்பித்துள்ளார். இதனை மாநில அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

பதவி விலகிய பிறகு ஜக்தீப் தன்கர் வெளியில் வராமலேயே இருந்த நிலையில், துணை ஜனாதிபதிக்கு என வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வீட்டின் வளாகத்திலேயே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்ததுடன், அந்த வீட்டிலேயே நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து வந்தார். கடந்த 40 நாட்களாக அங்கேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று அங்கிருந்து ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சென்று பல் டாக்டரை பார்த்து விட்டு திரும்பியு ள்ளார். இந்நிலையில், இன்று ( செப்டம்பர் 01) ஜக்தீப் தன்கர் அந்த இல்லத்தை காலி செய்துள்ளார்.
அதன்பின்னர், இந்திய தேசிய லோக் தள கட்சியின் அபய் சிங் சவுதாலாவுக்கு சொந்தமாக டில்லியின் சத்தார்பூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறியுள்ளார். அவருக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் பண்ணை வீட்டுக்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக அபய் சிங் சவுதாலா கூறுகையில், 'எங்களுக்கு இடையே குடும்ப உறவு உள்ளது. அவர் என்னிடம் வீடு ஏதும் கேட்கவில்லை. நான் தான் அவருக்கு வழங்கினேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Jagdeep Dhankhar has vacated the Vice Presidents official residence