தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்குத் தனது கட்சி ஆதரவு தெரிவித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி..!
Jagan Mohan Reddy expresses regret for supporting the law on the appointment of Election Commissioners
2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்குத் தனது கட்சி ஆதரவு தெரிவித்ததற்குத் தற்போது வருத்தம் தெரிவிப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான அமைப்பில் ஆளுங்கட்சியின் தலையீடு இருக்கக் கூடாது என்றும், இதற்காக நடுநிலையான தேர்வுக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்றும், "ஒரு தேர்வை எழுதும் மாணவரே தனக்கான தேர்வு அதிகாரியை நியமிக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
நேற்று தாடேப்பள்ளியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி மேலும் கூறியதாவது;
ஆந்திராவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்காக தாக்குதல்கள், பொய் வழக்குகள் மற்றும் காவல்துறையினரின் துஷ்பிரயோகம் ஆகியவை பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பதி, கடப்பா, புலிவெந்துலா மற்றும் புங்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பறிக்கப்பட்டதாகவும், காவல்துறையினர் அச்சுறுத்தியதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
46 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், சீரமைக்கப்படாத பழைய வாக்காளர் பட்டியலைக் கொண்டு அவசர அவசரமாகத் தேர்தலை நடத்த அரசு முனைப்பு காட்டுவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், இடஒதுக்கீடு விவரங்கள் வெளியான அடுத்த நாளே தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகளுக்குத் தயாராகப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும், வார்டுகளின் எல்லை மறுவரையறை ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநிலத் தேர்தல் ஆணையரும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக செயல்படுவதாக கூறிய அவர், மாநிலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதிலும் முதலமைச்சரின் தலையீடு இல்லாத நடுநிலையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவில் 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெற்று, அக்டோபர் 30-இல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து மண்டல மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல்கள் நவம்பர் 03-ஆம் தேதியும், கிராம பஞ்சாயத்துத் தேர்தல்கள் நவம்பர் 26, 29 மற்றும் டிசம்பர் 02 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகவும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Jagan Mohan Reddy expresses regret for supporting the law on the appointment of Election Commissioners