'விண்வெளித்துறையில் தனியார் என்பது வரவேற்க கூடிய விஷயம்': இஸ்ரோ தலைவர் கருத்து..!
ISRO chief says that privatization in the space sector is a welcome thing
விண்வெளித்துறையில் தனியார் என்பது வரவேற்க கூடிய விஷயம், என்றும் தனியாரின் பங்களிப்பு வளர்ச்சியை தரும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 2040-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கு இணையாக இஸ்ரோவின் திட்டங்கள் இருக்கும் என்றும், அதற்கான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் 08 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 1200 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வுக் கூடங்கள் உள்ளன. அத்துடன், விண்வெளித்துறையில் தனியார் என்பது வரவேற்க கூடிய விஷயம் என்றும், தற்போது விண்ணில் இந்தியாவின் 57 செயற்கை கோள்கள் உள்ளன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இதை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆண்டுதோறும் 50 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும். அரசு மட்டும் இதைச் செய்ய முடியாது என்றும், அதனால் தான் தனியார் பங்களிப்பும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டது. தனியார் பங்களிப்பு என்பது பிரதமரின் சிறப்பான திட்டமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரிடர் எச்சரிக்கை தொடர்பாக துல்லியமான தகவல்களை தெரிவிக்க இஸ்ரோ செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறதாகவும், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சந்திராயன் - 05 திட்டம் ஜப்பானின் விண்வெளி மையத்துடன் இணைந்து செயல் படுத்தப்படவுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி மையம் 2035- இல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் 6000 கிலோ செயற்கைக்கோள் வணிகரீதியாக நமது ராக்கெட்டிலிருந்து டிசம்பரில் அனுப்பி வைக்கப்படும். சுபான்ஷூ சுக்லா நாசாவின் உதவியுடன் விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். இது அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியாகும் என்று தெரிவித்துள்ளார். 2040-இல் இந்தியாவின் ராக்கெட் மூலம் சந்திரனுக்கு ஆட்களை அனுப்ப உள்ளோம் என்று கூறியுள்ளார்.
English Summary
ISRO chief says that privatization in the space sector is a welcome thing