சைபர் மோசடி பணப் பரிவர்த்தனை எதிரொலி! தமிழகம் முழுதும் பெட்ரோல் பங்க்குகளில், டிஜிட்டல் முறையில் பணம் வசூலிப்பதை நிறுத்த திட்டம்? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சைபர் மோசடிகள் மூலம் பெறப்படும் பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கணக்குகள் மீது காவல்துறை நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், இதன் தாக்கம் பெட்ரோல் பங்க் டீலர்களையும் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சைபர் குற்ற வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு சார்பில் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் பலர் தங்களது வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் மோசடிகள் மூலம் பெறப்படும் பணத்தைப் பெறுவது, அதை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றுவது உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தப்படும் இத்தகைய கணக்குகள் பொதுவாக 'மியூல் அக்கவுண்ட்' என அழைக்கப்படுகின்றன. தேசிய இணைய குற்ற புகார் பதிவேற்ற தளம் (NCRP) மூலம் பெறப்படும் புகார்கள் மற்றும் காவல்துறையின் நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் இதுபோன்ற வங்கி கணக்குகள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டு வருகின்றன.

ஒரு வங்கி கணக்கில் இணைய மோசடியில் ஏமாற்றப்பட்ட பணம் வந்து, பின்னர் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தால், அந்த கணக்கு முடக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணையும் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் காரணமாக பெட்ரோல் பங்க் டீலர்களும் சிக்கல்களை எதிர்கொள்வதாக தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத் தலைவர் முரளி கூறுகையில், தமிழ்நாட்டில் சுமார் 7,000 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சராசரியாக 40 சதவீத விற்பனை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலமாகவும், மீதமுள்ளவை ரொக்கமாகவும் நடைபெறுவதாக தெரிவித்தார்.

வாடிக்கையாளர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது, அந்த பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல் பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அந்த பணம் சட்டவிரோத பரிவர்த்தனையுடன் தொடர்புடையதாக சைபர் கிரைம் விசாரணையில் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் பங்க் டீலர்களிடமும் விசாரணை நடத்தப்படுவதாக அவர் கூறினார். இதனால் டீலர்கள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சைபர் கிரைம் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வங்கிகள் டீலர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதால், அவர்களின் அன்றாட வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

“டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ததற்காக டீலர்களை அலைக்கழிப்பதும், வங்கி கணக்குகளை முடக்குவதும் தொடர்ந்தால், அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என முரளி எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில், பெட்ரோல் பங்க் டீலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை குறித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக வழங்கி, முறையான விசாரணை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்ற விசாரணைகளின்போது வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும் என்றும் தமிழக பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்பில்லாத வணிகர்களின் அன்றாட பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there a plan to stop digital payment collection at petrol bunks across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->