உலக பொருளாதார பதற்றம் மத்தியில் இந்தியா உறுதி...! - ரெப்போ ரேட் 5.25% -ல் நிலைநிறுத்தம்...!
India remains steadfast amid global economic turmoil Repo rate unchanged at 5point25 percentage
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால நிதி உதவிகளுக்கான அடிப்படை வட்டி விகிதமே ‘ரெப்போ ரேட்’ என அழைக்கப்படுகிறது. இந்த முக்கிய விகிதத்தை மாற்றுவது குறித்து, இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி விரிவான ஆலோசனைகள் நடத்தி முடிவு எடுக்கிறது.
சமீபத்தில், நாட்டின் சில்லறை பணவீக்கம் 2.74 சதவீதத்தில் இருந்து 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகிறது.

வட்டி விகித மாற்றங்கள் நேரடியாக பணவீக்கத்தையும், மக்களின் செலவுத் திறனையும் பாதிக்கும் என்பதால், ரிசர்வ் வங்கி கடந்த காலங்களில் வட்டியை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுகடந்த ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாக 1.25 சதவீதம் வரை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.
அதன் விளைவாக, வங்கிக் கடன்களின் அடிப்படை வட்டி விகிதம் தற்போது 5.25 சதவீதத்தில் நிலை கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் நீடித்தது.இந்நிலையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ ரேட் 5.25 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
இதனால் வீடு மற்றும் வாகனக் கடன்களின் வட்டி விகிதங்களில் உடனடி மாற்றம் எதுவும் ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், எஸ்.டி.எப் விகிதம் 5 சதவீதமாகவும், எம்.எஸ்.எப் மற்றும் வங்கி விகிதங்கள் 5.5 சதவீதமாகவும் மாற்றமின்றி தொடர்கின்றன.இதுகுறித்து அவர் கூறுகையில், “ஈரான் தொடர்பான போர் சூழ்நிலை உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாகவே உள்ளது. கடந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் ஆதரவான கொள்கைகள், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் சாதகமான நிதி சூழல் ஆகியவை பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துள்ளன. வலுவான நுகர்வு மற்றும் முதலீடு பொருளாதாரத்தில் உற்சாகத்தை தொடர்ந்து உருவாக்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேற்காசியப் போர் காரணமாக வங்கிக் கடன் வட்டியில் மாற்றம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்த பொதுமக்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு அளவுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கை குழு இந்த முக்கிய முடிவை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
India remains steadfast amid global economic turmoil Repo rate unchanged at 5point25 percentage