ஏற்றுமதி துறைக்கு நம்பிக்கை ஊட்டும் இந்தியா-ஓமன் ஒப்பந்தம்...!
India Oman agreement gives confidence export sector
இந்தியா – ஓமன் இடையே கையெழுத்தான புதிய பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதி துறைக்கு புதிய சுவாசமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆயத்த ஆடைத் துறைக்கு இது ஒரு திருப்புமுனை என இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (AEPC) தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் சாதாரண பரிமாற்றத்திலிருந்து நீண்டகால பொருளாதார கூட்டணியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம் மட்டுமல்லாது, முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சந்தை விரிவாக்கம் ஆகிய துறைகளிலும் புதிய வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன.

இதன் முக்கிய பயன், இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், விவசாய உற்பத்தியாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது. ஓமன் வழியாக வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளில் இந்திய பொருட்கள் சுங்கவரி தடையின்றி நுழைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனால் இந்திய தயாரிப்புகளின் விலை போட்டித்திறன் கணிசமாக உயரும்.மேலும், ஏற்றுமதி தொடர்பான தளவாடச் செலவுகள் குறையவுள்ளதால், இந்திய உற்பத்தியாளர்கள் உலகளாவிய மதிப்பு சங்கிலிகளில் நேரடியாக இணையும் சூழல் உருவாகும். குறிப்பாக ஆயத்த ஆடைகள், துணிநூல், வேளாண் பொருட்கள் போன்ற துறைகள் இந்த ஒப்பந்தத்தால் பெரும் வளர்ச்சி வேகத்தை பெறும் என AEPC கணிக்கிறது.
சமீப காலமாக அமெரிக்க வரி விதிப்புகளால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மாற்று சந்தை வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முக்கிய பங்கு வகித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு AEPC சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
India Oman agreement gives confidence export sector