இனி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும்? அரசின் புதிய விதிகள்..!
How often can you book a gas cylinder from now on
கடந்த ஒரு மாதமாக மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்பிஜி எரிவாயு பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு இல்லை என்றும், சிலிண்டர் தாமதமாக விநியோகம் செய்யப்படுகிறதாகவும், முன்பதிவுக்காகவே பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தற்போது எரிவாயு தேவைக்காக இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையத் தொடங்கியுள்ளன. இதை குறிப்பிட்டு 'நாட்டில் எரிவாயுவுக்குப் பற்றாக்குறை இல்லை என்பதால், நுகர்வோர் பீதியடையவோ அல்லது முன்கூட்டியே கூடுதலாக முன்பதிவு செய்யவோ தேவையில்லை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது பல வாடிக்கையாளர்கள் பதற்றம் காரணமாக தங்களுக்குத் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்களை முன்பதிவு செய்வதாலேயே, விநியோக அமைப்பில் அழுத்தம் ஏற்படுகிறது என அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, நியாயமான முறையில் அனைவருக்கும் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்கும், முன்பதிவுக் காலம் மற்றும் விநியோகச் செயல்முறையில் அரசு தரப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா ஷர்மா தெரிவித்துள்ளதாவது;
''உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை மத்திய அரசாங்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதேநேரம் எரிவாயு முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிவாயு கள்ளச்சந்தை மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்காக, மத்திய அரசு தற்போது விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC) முறையைக் கடுமையாக அமல்படுத்த உள்ளது.
ஏற்கெனவே, அமலிலுள்ள இந்த முறையின் பயன்பாட்டை, 90 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கம் இலக்காக நிர்ணயித்தது. நல்வாய்ப்பாக, நாம் ஏற்கனவே 92 சதவீதத்தை எட்டிவிட்டோம். எனவே இனி எரிவாயு சிலிண்டர்கள் எந்தவித குறுக்கீடும் இன்றி, உரிய பெறுநருக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். மேலும், வணிக எரிவாயு விநியோகமும் 70 சதவீத கொள்ளளவுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இது வணிகங்களுக்கு ஒரு பெரும் நிவாரணமாகும்'' என தெரிவித்துள்ளார்.
அதன்படி, இனிவரும் காலங்களில்,OTP இல்லாமல் சிலிண்டர் விநியோகம் பதிவு செய்யப்படாது. அவ்வாறு OTP இல்லாமல் சிலிண்டர் வழங்கும் ஏஜென்சிகள் மீது அபராதம் அல்லது உரிம ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என சுஜாதா ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், OTP விதிகள் கடுமையாக்கப்படுவதால் விநியோகம் பாதிக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், எரிவாயு கையிருப்பு தாராளமாக உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில், வாடிக்கையாளர்கள் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு முன், சிலிண்டரைப் பெற்ற பிறகு குறைந்தது 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இந்தக் கால அவகாசம் இன்னும் அதிகமாக உள்ளது. அங்குள்ள வாடிக்கையாளர்கள் 45 நாட்களுக்குப் பிறகே புதிய சிலிண்டர்களை முன்பதிவு செய்ய இனி அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம், ஒரு குடும்பம் அடிக்கடி சிலிண்டர் முன்பதிவு செய்யும் போக்கைத் தடுக்கவும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சரியான விநியோகத்தை உறுதி செய்யவும் முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, இயல்பான சூழ்நிலைகளில், முன்பதிவு செய்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், சில பகுதிகளில் அதிகரித்த தேவை அல்லது தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தால் சிறிய தாமதங்கள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் முதல், சிலிண்டர் விநியோகம் செய்ய குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆவதாகவும், முன்பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும் பல வாடிக்கையாளர்கள் அளித்த புகாருக்கு இன்று பதிலளித்துள்ள அரசு அதிகாரிகள்;
"சில இடங்களில் முன்பதிவுகள் திடீரென அதிகரித்ததால், சர்வரில் சின்ன சின்ன பிரச்சனை ஏற்பட்டது. அது தற்போது மெல்ல மெல்ல சரியாகியுள்ளது. எனவே, இனி பிரச்சனை இருக்காது" என்று தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் இனி சிலிண்டர் விநியோகத்திற்கான காலம் இனி அதிகமாக இருக்காது என்றும், கள்ளச்சந்தையில் சிலிண்டர் விநியோகிக்கப்படுவது இனி தடுக்கப்படும் என்றும் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
How often can you book a gas cylinder from now on