தீபாவளி போனஸ் தரமாட்டிங்களா... டோல் கேட் ஊழியர்கள் செய்த சம்பவம்! இலவசமாக சென்ற வாகன ஓட்டிகள்!
hariyana diwali bonus issue toll gate free
அரியானா மாநிலத்தின் ஆக்ரா–லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள பதேஹாபாத் சுங்கச் சாவடியில் தீபாவளி போனஸ் வழங்காததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சுங்கச் சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள், நீண்டநாளாக நிறுவனம் வழங்கும் போனஸுக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வாக்குறுதி அளித்த போதிலும், வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படாததால் அவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இதன் விளைவாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை, ஊழியர்கள் கேட்டை திறந்தபடியே வைத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று விட்டன. வழக்கமாக, வாகனம் கேட்டை அடைந்தவுடன் fastag மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; அதன் பிறகே கேட் திறக்கும். ஆனால், போராட்டத்தினால் இந்த நடைமுறை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுங்கச் சாவடியை நிர்வகிக்கும் ‘ஸ்ரீசாய் அண்டு தத்தார்’ நிறுவனம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதாக முன்பு அறிவித்திருந்தது. ஆனால், பணம் செலுத்தப்படாததால் ஊழியர்கள் நிறுவனம் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
ஒரு ஊழியர் கூறுகையில், “நான் கடந்த ஒரு வருடமாக இங்கு பணிபுரிந்து வருகிறேன். இதுவரை ஒரு ரூபாய் போனஸும் வழங்கப்படவில்லை. கடுமையாக உழைத்தும் சம்பளம் கூட சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. போனஸ் கேட்கும்போது வேலைநீக்கம் செய்வோம் என மிரட்டுகிறார்கள்” என்றார்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய் இழப்பை சரிசெய்யவும், ஊழியர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
hariyana diwali bonus issue toll gate free