Freedom Fighters : நாடக உலகின் இமயமலை... யார் இவர்?!
Freedom fighter viswanatha doss history
விஸ்வநாததாஸ்:
தனது வாழ்நாளையும், திறமைகள் முழுவதையும் தேசத்திற்கு அர்ப்பணித்தவர் அமரகவி தியாகி விஸ்வநாததாஸ். நாடக கலைக்கே தன்னை அர்ப்பணித்ததற்காக 'நாடக உலகின் இமயமலை' என்றும் சிறப்பிக்கப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடக கலைஞரும் ஆன விஸ்வநாததாஸை பற்றிய சிறிய தொகுப்பு...!!
பிறப்பு :
விஸ்வநாததாஸ் 1886ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகாசியில் சுப்ரமணியம், ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார்.
விடுதலை போராட்டத்தில் விஸ்வநாததாஸின் பங்கு :
விஸ்வநாததாஸ் குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். தன் நடிப்பில் அனைவரையும் கவரும் வண்ணம் பல வித்தியாசமான வேடங்களில் பெண்ணாகவும், ராஜபார்ட்டாகவும் நடித்தார் விஸ்வநாததாஸ். வேடத்திற்குத் தக்க குரலும், உடல் மொழியும் இயல்பாகவே விஸ்வநாததாஸிடம் இருந்தது. இவருக்கென ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது.
1911ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு காந்தி வருகை தந்தார். அப்போது நாடக மேடையொன்றில் பாடிய பாடல் மக்களையும் அங்கே இருந்த காந்தியையும் கவர்ந்தது. பெரும் மக்கள் கூட்டத்தைக் கவர்ந்திழுக்கும் விஸ்வநாததாஸ் திறமையைக் கண்டு வியந்த காந்தி அவரைச் சந்தித்துப் பாராட்டினார்.
'உன் திறமை நாட்டிற்கு பயன்படட்டும், தாய்நாட்டின் சுதந்திர பணியில் உன்னை அர்ப்பணித்துக் கொள்" என்று காந்தி அறிவுறுத்தினார். தன்னுடைய இசைத் தமிழாலும், நாடகத் தமிழாலும் தேச உணர்வை ஊட்டி வந்த விஸ்வநாததாஸ் மேலும் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.
தான் மேடையேறும் ஒவ்வொரு நாடகத்திலும் தேச விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினார். நாடகம் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள் மனதிலும் தன்னுடைய நடிப்பாலும், கம்பீரமான குரல் வலிமையாலும் தேசபக்தியைப் புகுத்தினார் விஸ்வநாததாஸ்.
ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து விஸ்வநாததாஸ் எழுதிய, 'பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது" என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை உணர்வை புகுத்தினார்.
விஸ்வநாததாஸ் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கத்தை மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1938ஆம் ஆண்டு துவக்கினார். இந்த சங்கத்தில் தியாகி விஸ்வநாததாஸ் தனது உணர்ச்சி மிகுந்த நாடகங்கள் மூலம் மக்களிடையே சுதந்திர வேட்கையை வளர்த்தார்.
இனி விஸ்வநாததாஸ் ஆங்கிலேயரைத் தாக்கியோ அல்லது இந்திய விடுதலை பற்றியோ மேடைகளில் பாடக்கூடாது என தடையாணை பிறப்பித்தது ஆங்கிலேய அரசு. தடையை மீறியதால் சிறைத் தண்டனைப் பெற்றார்.
பின்னர் விடுதலை பெற்று இந்த தேசத்தின் விடுதலைக்காக கிராமங்கள் தோறும் தேசபக்தி மணம் பரப்பி போராடினார், அதற்காக இருபத்தொன்பது முறை சிறைச் சாலை சென்றார்.
விஸ்வநாததாஸ் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டில் காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளை கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நாடகத்தை நடத்தியவர்.
விஸ்வநாததாஸின் மறைவு :
1940ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி விஸ்வநாததாஸ், தனது 54வது வயதில் முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே உயிர்நீத்தார்.
English Summary
Freedom fighter viswanatha doss history