எப்ஸ்டீன் சர்ச்சை மீண்டும் வெடிப்பு: அனில் அம்பானி பெயரும் பட்டியலில்...?
Epstein controversy erupts again Anil Ambanis name list
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய கோடீஸ்வர தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பாலியல் குற்றச்சாட்டுகளால் பெயர் பெற்றவர். புளோரிடாவின் பாம் பீச் பகுதியில் உள்ள அவரது பிரமாண்ட பண்ணை வீடுகளில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக 2005-ம் ஆண்டில் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து நடந்த வழக்கில் அவர் 13 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். எனினும், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் சிறுமிகளை கடத்தி பாலியல் வட்டாரங்களில் ஈடுபடுத்தியதாக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்ததால், 2019 ஜூலை மாதத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி மான்ஹாட்டன் சிறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது – அதிகாரப்பூர்வமாக தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், இந்த மரணம் பல சந்தேகங்களையும் சதி கோணங்களையும் கிளப்பியது.
எப்ஸ்டீனின் தொடர்பு வட்டாரம் உலக அரசியல் மற்றும் தொழில்துறை உயர்மட்டங்களை எட்டியிருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர்கள், சர்வதேச தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலருடன் அவர் நெருக்கமாக பழகியிருந்ததாக வெளிவந்த ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து சர்ச்சையை தூண்டி வருகின்றன.
இந்த பின்னணியில், எப்ஸ்டீனுடன் தொடர்புடையவர்களின் பட்டியலில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி பெயரும் இடம்பெற்றதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நியூயார்க் சென்றபோது, மான்ஹாட்டனில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், 2017 மார்ச் மாதத்தில் இருவருக்குமிடையே நடந்ததாகக் கூறப்படும் தகவல் பரிமாற்றங்கள் குறித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இத்தகவல்கள் அனைத்தும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையிலானவை மட்டுமே என்பதும், தொடர்புடைய தரப்புகள் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரம், எப்ஸ்டீன் மரணத்திற்குப் பிறகும் அவரது தொடர்புகள் குறித்து உலகளவில் தொடர்ந்தும் கேள்விகளை எழுப்பி வரும் இன்னொரு சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.
English Summary
Epstein controversy erupts again Anil Ambanis name list