'குடும்பத் தொழிலை காப்பாற்ற மேகதாது விவகாரத்தில் திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றம்': இபிஎஸ் குற்றச்சாட்டு..!
EPS alleges that the DMK rulers actions in the Mekedahu case to save the family business are an unforgivable crime
கர்நாடகாவில் உள்ள குடும்பத் தொழிலை காப்பதற்காக, மே கதாது விவகாரத்தில் உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:
''தமிழகத்தின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று ஏற்கனவே அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் டில்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு வாய்மூடி மவுனியாக இருந்ததையும் நான் கண்டித்துள்ளேன்.
அனைத்தையும் மீறி, சுப்ரீம்கோர்ட்டில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.'' என்று அறிக்கையின் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
EPS alleges that the DMK rulers actions in the Mekedahu case to save the family business are an unforgivable crime