போலி செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; காங்கிரஸ் பெண் நிர்வாகிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!
Election Commission warns Congress woman executive of strict action if she spreads fake news
பீஹார் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மஹாகட்பந்தன் மோசமான தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 66 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 06 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் ஒரு வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது. இது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பீஹாரில் ஓட்டுத் திருட்டு நடந்ததாக காங்கிரஸ் பெண் நிர்வாகி சுப்ரியா ஷ்ரினேட் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. பீஹார் சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜ தொண்டர் ஒருவர் பாட்னா மற்றும் அங்கிருந்து 05 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த கிராமத்தில் என இரு இடங்களில் ஓட்டுப்போட்டதாக பத்திரிக்கையாளரிடம் கூறியதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், ஒரு இடத்தில் ஓட்டு போட்ட பிறகு, கையில் வைக்கப்படும் மையை பப்பாளி இலையில் இருந்து வரும் பாலை வைத்து அழித்ததாக அந்த நபர் கூறியதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளதாவது: தேர்தல் ஆணையம் வாக்காளரின் பெயர், தேர்தல் அட்டை எண், பூத் விபரம் உள்ளிட்டவற்றை கொடுத்தால், இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன், எந்த உண்மையான தகவலும் இல்லாமல் அதனை சரிபார்க்க முடியாது என்றும், அதேவேளையில், போலி செய்தி பரப்பினால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும், எனக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் நிர்வாகி சுப்ரிய ஷ்ரினேட் கூறுகையில்; 'இதுபோன்ற வெற்று மிரட்டல்களை எல்லாம் வேறு யாருக்காவது விடுங்கள், மரியாதைக்குரிய பீஹார் தேர்தல் ஆணையரே..!உங்களுக்கு தேவையான தகவலை சம்பந்தப்பட்ட நிருபரிடம் போய் கேளுங்கள். கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து இப்போது எழுந்து விட்டீர்கள் என்றால், இந்த ஜென்டில்மேன்களை கண்டுபிடியுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Election Commission warns Congress woman executive of strict action if she spreads fake news