படிப்பு தடைபடக்கூடாது...! வெறும் 2 மாணவிகளுக்காக அடர்ந்த காட்டுக்குள் 10 கி.மீ பயணிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்...!
Education should not be interrupted government school teacher travels 10 km dense forest just 2 students
மாணவிகளின் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக, அடர்ந்த வனப்பகுதி வழியாக தினமும் 10 கிலோமீட்டர் தூரம் பயணித்து பாடம் நடத்தி வரும் மராட்டிய அரசு பள்ளி ஆசிரியரின் அர்ப்பணிப்பு பலரையும் நெகிழச் செய்துள்ளது.மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ககன்பவ்டா தாலுகாவில் அமைந்துள்ளது காவல்டெக் தங்கர்வாடா என்ற சிறிய மலைக்கிராமம். வெறும் 3 வீடுகள் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில் மின்சார வசதியும், முறையான சாலை வசதியும் இல்லை.

இங்கு வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த 8 வயது மற்றும் 5 வயதுடைய இரு சகோதரிகள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊராட்சி பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் கல்வி எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் ஆசிரியர் ஜீவன் மிதாரி உறுதியாக இருந்துள்ளார்.
பள்ளி அமைந்துள்ள பகுதிக்கு இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், மாணவிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஜீவன் மிதாரி தினமும் தார் சாலை இல்லாத கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து செல்கிறார்.அடர்ந்த காட்டின் வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மலை ஏறிச் சென்று மாணவிகளுக்கு பாடம் நடத்தும் அவர், வகுப்புகளை முடித்த பின்னர் மீண்டும் அதே பாதையில் 5 கிலோமீட்டர் நடந்து தனது இருப்பிடத்துக்கு திரும்புகிறார்.
மழை, வெயில் என எந்த காலநிலையாக இருந்தாலும், மாணவிகளின் கல்விக்காக இந்த தினசரி பயணத்தை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.ஆசிரியர் பயணிக்கும் காட்டுப்பகுதியில் காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் காட்டு நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்தான சூழல் இருந்தபோதிலும், மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்துடன், வசதிகள் இல்லாத தொலைதூரப் பகுதியில் தனது பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் ஜீவன் மிதாரியின் செயல், ஆசிரியர் பணியின் உண்மையான உயரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாணவிகளின் கல்விக்காக காட்டுப்பாதையில் தினமும் பயணித்து வரும் ஜீவன் மிதாரியின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது சேவைக்கு பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Education should not be interrupted government school teacher travels 10 km dense forest just 2 students