''ஜென் ஜி தலைமுறையைத் தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; நீட் வினாத்தாள் கசிவு போராட்டத்திற்கு பின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?: தர்மேந்திர பிரதான் விளக்கம்..!
Dharmendra Pradhan explains why he resigned as a minister after the NEET question paper leak protest
நீட் வினாத்தாள் கசிவு பிரச்னையின் பின்னர் தான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து பாஜக எம்பி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாஜக சம்பல்பூர் எம்பியான முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் வினாத்தாள் கசிவு பிரச்னை தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து கடந்த ஜூலை 25-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள ஜி.எம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், தனது ராஜினாமா குறித்து முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, ''ஜென் ஜி தலைமுறையினர் நமது குழந்தைகள்; ஆனால், சில அமைப்புகள் அவர்களை தவறாக திசைதிருப்ப முயன்றன. எனக்கு தனிப்பட்ட பிரச்னைகள் எதுவுமில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் 02 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் கனவுகளை விட எனக்கு பதவி முக்கியமில்லை என்பதால் பிரதமர் மோடியைச் சந்தித்து, எனது ராஜினாமா கடிதத்தை வழங்கி விலகினேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரேராகோலில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் பேசிய அவர், பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் தன் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாகவும், தான் ஒடிசா மக்களுக்கு ஒருபோதும் அவமானத்தை ஏற்படுத்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, தர்மேந்திர பிரதானின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பிஜேடி கட்சியைச் சேர்ந்த சுமார் 30 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dharmendra Pradhan explains why he resigned as a minister after the NEET question paper leak protest