உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கொடுத்த ஒரு வாரத்தில் அதிர்ச்சி; உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் பங்கேற்ற விழாவில் கார் கண்ணாடி உடைப்பு..!
Car window smashed at a function attended by Usilampatti TVK MLA Vijay
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் பங்கேற்ற விழாவில் மர்ம நபர்கள் புகுந்து கார் கண்ணாடி, நாற்காலிகளையும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகே, வாலாந்தூரில் தவெக சார்பில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் தலைமை வகித்ததோடு, நலத்திட்ட உதவிகள் வழங்கி வைத்தார். அப்போது விழாவில் திடீரென கூட்டத்தில் புகுந்த மர்மகும்பல் தவெகவில் இணைந்த ஆரியபட்டி பாண்டியன் என்பவரது கார் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்துள்ளனர்.

அத்துடன் அங்கிருந்த சேர்களையும் அடித்து நொறுக்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தவெக சார்பில் வாலாந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக, கடந்த 1ந் தேதி பொது இடங்களுக்கு செல்லும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எம்எல்ஏ விஜய், மதுரை எஸ்பியிடம் புகார் அளித்திருந்தார்.
அவர் புகார் அளித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே எம்எல்ஏ விஜய் பங்கேற்ற விழாவில் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Car window smashed at a function attended by Usilampatti TVK MLA Vijay