நெல்லையில் திடுக்கிடும் சம்பவம்; களக்காடு அருகே பன்றி பண்ணை உரிமையாளர் அடித்து கொலை?; நடந்தது என்ன..?
Pig farm owner beaten to death near Kalakadu
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளம், பொட்டல்குளத்தை சேர்ந்தவர் 48 வயதான ராமகிருஷ்ணன். இவரது மனைவி கலைச்செல்வி, இவர்களுக்கு 1 மகளும், 1 மகனும் உள்ளனர்.
ராமகிருஷ்ணன் ஊருக்கு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரத்தில் பன்றிகள் பண்ணை வைத்து நடத்தி வந்தார். இரவு நேரங்களில் தோட்டத்திற்கும், பன்றி பண்ணைக்கும் செல்வது வழக்கமாக வைத்திருந்துள்ளார். சம்பவ தினமான நேற்று இரவில் ராமகிருஷ்ணன் பன்றி பண்ணைக்கு வழக்கம் போல சென்ற நிலையில், அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில் இன்று களக்காடு-சேரன்மகாதேவி பிரதான சாலையில், கீழக்கருவேலங்குளம் அருகே அவர் சட்டை அணியாமல் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்த களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு சட்டையின்றி கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட ராமகிருஷ்ணனின் தலையில் ரத்தக் காயம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சடலத்தை இழுத்து வந்த தடயங்களை கண்டனர். எனவே, அந்த வீட்டில் ராமகிருஷ்ணன் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு, சடலத்தை சாலையில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமகிருஷ்ணன் அந்த பெண்ணின் வீட்டிற்கு எதற்கு சென்றார்? எப்படி இறந்தார்? பெண் தொடர்பு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா? மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
Pig farm owner beaten to death near Kalakadu